சென்னை: புது ரூபாய் நோட்டுகளை மாற்றும்போதுதான் கடைக்காரர்களின் சந்தேகப் பார்வை நம் மீது பட்டு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றால்… 2005க்கு முன்பாக அச்சிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்ற முயன்றவருக்கு ஏற்பட்ட போலீஸ் அனுபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ள நோட்டு புழக்கம், கருப்பு பணப் பதுக்கலை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி அதிரடி திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 2005ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. வரும் மார்ச் 31க்கு பிறகு 2005ம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தது. ஏப்ரல் 1 முதல் மூன்று மாதங்களுக்குள் வங்கிக்கு சென்று இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.
இதையடுத்து 2005க்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட பணத்தை வங்கியில் கொடுத்து மாற்ற பொது மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மேற்கு மாம்பலம் புஷ்பவதியம்மாள் தெருவைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (26) என்பவர், நேற்று மதியம் ரூ.10 ஆயிரம் மதிப்புக்கு ரூபாய் நோட்டுகளை, ஒரு பையில் எடுத்துக் கொண்டு, அதே பகுதி லட்சுமி தெருவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு சென்றார். அவர் வைத்திருந்த பையில் ரூ.10 மற்றும் 20 ரூபாய் புத்தம் புதிய நோட்டுகள் கட்டுகட்டாக இருந்தது. அனைத்தும் 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டவை. கட்டுகட்டாக புத் தம்புதிய நோட்டுகளை பார்த்த வங்கி ஊழியர்கள் அவை கள்ள நோட்டாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து குமரன் நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, ‘ஒருவர் கள்ள நோட்டுடன் எங்கள் வங்கிக்கு வந்துள்ளார். உடனே வாருங்கள்’ என்று அழைத்தனர். குமரன் நகர் போலீசார் விரைந்து வந்து, அரிகிருஷ்ணனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் கொண்டு வந்த பணத்தையும் அள்ளிச் சென்றனர். உடனடியாக சிபிசிஐடி கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீஸ் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்தனர். அதில், அனைத்து நோட்டுகளும் நல்ல நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அரிகிஷ்ணன் விடுவிக்கப்பட்டார். அவர் கொண்டு வந்த பணத்தை வங்கி அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து, அரிகிருஷ்ணன் கூறியதாவது: என் தந்தை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் புது நோட்டு கிடைத்தால் அதை பத்திரப்படுத்தி வைப்பார். அதேபோல் கடந்த 2005ம் ஆண்டு வங்கியில் எடுத்த புதிய நோட்டுகளை செலவு செய்யாமல் ஒரு பையில் மூட்டை கட்டி வைத்திருந்தார். ரிசர்வ் வங்கி அறிவிப்பு காரணமாக புதிய ரூபாய் நோட்டுகள் வாங்க நான் வங்கிக்கு சென்றேன். ஆனால், வங்கி அதிகாரிகள் அதை கள்ள நோட்டு என்று தவறாக நினைத்து போலீசாரிடம் பிடித்து கொடுத்து விட்டனர். இந்த சம்பவம் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இவ்வாறு அரிகிருஷ்ணன் கூறினார்.

No comments:
Post a Comment