தஞ்சையை சேர்ந்த பெண் சவுதியில் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் 7 மாதத்திற்குப்பின் நேற்று திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது. தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் அந்தோணியாகப்பா. தஞ்சையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் இமாகுலேட்(30) கடந்த 2012 அக்டோபர் 20ம் தேதி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைக்காக சவுதி அரேபியாவில் தமாம் பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கு ஒரு வீட்டில், வீட்டு வேலையுடன் கம்ப்யூட்டர் ஆபரேட் பணி கொடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர், மனதை தேற்றி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 10.5.13 அன்று உடல் நலகுறைவால் இமாகுலேட் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இமா குலேட் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை இந்தியாவிற்கு கொண்டு வந்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.
தஞ்சை கலெக்டர், போலீஸ் எஸ்பி, இந்திய வெளியுறவுத்துறை, சவுதி அரேபியா தூதரகம், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 22 உயர் அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் எவ்வித பயனுமில்லை. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புகார் மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் தலையீட்டின் பேரில் சடலத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க சவுதி அரசு சம்மதித்தது. அதன்படி 7 மாதங்களுக்கு பிறகு நேற்றுக் காலை இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இமாகுலேட் உடல் திருச்சி வந்து சேர்ந்தது. உடன் சவுதிஅரேபிய தூதரக அதிகாரியும் வந்திருந்து உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர், சாவில் சந்தேகம் இருப்பதாக ஏற்கனவே கோர்ட்டில் மனு செய்திருப்பதால் உடலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடல் திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மார்ச்சுவாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கிளையில் கொடுத்த மனு மீதான விசாரணை வரும் 21ம் தேதி நடைபெறுகின்றது.
அதுவரையில் உடலை பாதுகாப்பாக மார்ச்சுவாரியில் வைத்திருக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளதன் பேரில் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து இமாகுலேட்டின் தந்தை அந்தோணி யாகப்பா கூறுகையில், என மகள் சவுதி செல்வதற்கு தஞ்சையில் உள்ள ஒரு டிராவல் சப்&ஏஜென்ட் மூலம் திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள முக்கிய ஏஜென்ட் உதவியுடன் தமாமில் உள்ள ஒரு ஏஜென்ட் ஏற்பாடு செய்திருந்தார்.
டிராவல் ஏஜென்ட்டுகள் கம்ப்யூட்டர் ஆபரேட் வேலை எனக்கூறி என்மகளை அழைத்துச் சென்று ஏமாற்றிவிட்டனர். எனது மகளும் நிலை குறித்து கூறி திரும்ப அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். 5 நாட்களுக்கு ஒருமுறைதான் போனில் பேச முடியும். கடந்த ஆண்டு மே 5ம் தேதி தான் என் மகளுடன் கடைசியாக போனில் பேசினோம். அதன் பின்னர் 21ம் தேதி வரை பேச முடியவில்லை. போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பின்னர் 21ம் தேதிதான் அங்கிருந்து ஆரிஸ் என்பவர் என்மகள் 10ம் தேதியே இறந்து விட்டதாக தெரிவித்தார். அதன் பின்னரே எங்களுக்கு சந்தேகம் அதிகமானது. 10ம் தேதி இறந்ததை ஏன் தெரிவிக்கவில்லை என வேலை செய்த இடம் மற்றும் தூதரகம் ஆகியவற்றில் கேட்டபோது சரியான தகவல் கிடைக்கவில்லை. உடலை கொண்டு வரவேண்டும் என கூறியதையடுத்து 4 மாதங்களாக யாரும் நாங்கள் பேசிய போனுக்கு பதில் அளிக்கவில்லை.
எனவேதான் வேறு வழியின்றி நீதிமன்றம் சென்றோம். நீதிபதியின் கடுமையான நடவடிக்கையின் பேரில்தான் எனது மகள் உடல் இங்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் என் மகள் தூக்கிட்டு கொண்டதால் கழுத்து உடைந்து இறப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இது குறித்து நீதிமன்றத்தில் வரும் 21ம் தேதி மனுசெய்வோம் என தெரிவித்தார்.
சவுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள உடல் எனது மகளுடையதுதானா என்பதிலும் சந்தேகம் உள்ளது. 80 சதவிகிதம் என் மகளின் உடலாக இருக்க வாய்ப்பில்லை. 7 மாதம் பதப்படுத்தப்பட்டதால் அவ்வாறிருக்கும் என கூறுகின்றனர். அப்படியானால் எனது மகளின் வலது கை சுண்டுவிரல் மற்றும் இடது காதில் இருந்த மச்சங்கள் என்ன வாயிற்று? உடல்தான் சுருங்கி விட்டது என்றால் அடையளமுமா மறைந்து போயிருக்கும்? மேலும் பல் எகிறி முகம் மிகவும் கோரமாக உள்ளதால் என் மகளாக இருக்க வாய்ப்பில்லை.
எனவே 21ம் தேதி பிரேத பரிசோதனையுடன் டிஎன்ஏ சோதனையும் மேற்கொள்ள மனு செய்வோம் என அந்தோணி யாகப்பா கண்ணீருடன் தெரிவித்தார். இமாகுலேட்டுக்கு திருமணமாகி விட்டது. அவரது கணவர் டேவிட்டையும் சவுதிக்கு அழைக்க இமாகுலேட் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டதால் டேவிட் சவுதி செல்ல முடியாமல் போனது.


No comments:
Post a Comment