
சவுதி அரேபியாவில் வேலை செய்த 51 வயது பெண்ணை, 38 வயது வங்கி மேலாளர் 3 வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். தனது 1 கோடியே 75 லட்சத்தை பறித்து கொண்டு பிரிந்து சென்றுவிட்டதாக அந்த பெண் புகார் செய்ததையடுத்து வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் வெளி நாட்டில் அல்ல, அண்ணா நகரில்தான் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:
கோயம்பேடு விளையாட்டு நகரத்தில் வசிப்பவர் எலிசபெத்ராணி(51). சவூதிஅரேபியாவில் கடந்த 15 ஆண்டுகளாக நர்சிங் பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்தார். இவருக்கு மாதம் 3 லட்சம் சம்பளம். அண்ணா நகரில் உள்ள அரசு வங்கி ஒன்றில் எலிசபெத் ராணி, கணக்கு வைத்துள்ளார்.
இதனால், அடிக்கடி வங்கிக்கு வந்து செல்லும்போது, அதே வங்கியில் என்ஆர்ஐ பிரிவில் மேலாளராக இருந்த மாரியய்யா (38) என்பவருடன், எலிசபெத் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எலிசபெத் ராணி அளித்துள்ள புகார்: நான் சவூதி அரேபியாவில் வேலை செய்யும்போது மாதம் 3 லட்சம் சம்பளம் வாங்கினேன். மாரியய்யாவை காதலித்தபோது, அவருக்கு 40 லட்சம் கொடுத்தேன். பின்னர், திருமணம் முடிந்ததும், 1 கோடி கொடுத்தேன். திருமணத்துக்கு பின் விருப்பு ஓய்வில் வரும்படி கூறினார். இதனால், நான் சவூதி அரேபியாவில் இருந்த வேலையை ராஜினாமா செய்து வந்துவிட்டேன்.
இதை தொடர்ந்து, என்னிடம் 35 லட்சத்தை மாரியய்யா வாங்கினார். இதேபோல், திருமணமாகி 3 ஆண்டுகளில் சிறுக சிறுக 1 கோடி வரை வாங்கினார். என்னிடம் வாங்கிய பணத்தில் அவரது பெயர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதியில் வீடு, நிலம் வாங்கி வைத்துள்ளார்.
தற்போது மாரியய்யா, நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் முதன்மை மேலாளராக பணியாற்றுகிறார். பணத்தை வாங்கி கொண்டபின், என்னுடன் வாழ மறுக்கிறார். நான் பணத்தை திரும்ப கேட்டபோது, தர மறுக்கின்றார். எனவே, மாரியய்யாவிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் பிரான் வின்டேனி புளோரா வழக்குப்பதிந்து, மாரியய்யாவை கைது செய்தார்.

No comments:
Post a Comment